வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்களின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026” 04.09.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
தெல்லிப்பழை பிரதேசத்தின் கலை வடிவங்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.முக்கிய அம்சமாக இவ் ஆண்டிற்கான பிரதேச கலைச்சுடர் விருது மூவருக்கு வழங்கப்பட்டது. ஒப்பனைக் கலையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த திரு. ஐயாத்துரை பத்மதாஸ் அவர்களுக்கு “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வாத்தியக்கலையில், குறிப்பாக ஆர்மோனியம் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் மல்லாகம் கிழக்கைச் சேர்ந்த திரு. சிவநாதன் றஜீவன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், வயலின் வாத்தியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அளவெட்டி தெற்கைச் சேர்ந்த திருமதி நிக்ஸ்சனா கோகிலரூபன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி வைக்கப்பட்டது.பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.






















